முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைத்து தேசிய ஷூறா கவுன்சில்

பெரும்பாலான முஸ்லிம் மார்க்க அமைப்புக்கள், கலாசார அமைப்புக்கள், மற்றும் தனிநபர்கள் தமது வேற்றுமைகளைப் புறம் தள்ளி, ஜனவரி 24, 2014 ஆம் திகதி, தேசிய ஷூறா கவுன்சில் (National Shoora Council – NSC) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக கலந்துரையாடப்பட்டு வந்த இக்கவுன்சிலின் நிரந்த பொதுச் சபை (General Assembly), மற்றும் நிறைவேற்றுக் குழு (Executive Committee) என்பன கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டன.

கவுன்சிலை நிறைவுவதற்கான இடைக்கால கமிட்டியின் தலைவராக செயற்பட்டு வந்த, டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் புதல்வர் தாரிக் மஹ்மூத் அவர்கள், கவுன்ஸிலின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பில் இருந்தும் கவுன்ஸில் நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகம் வரலாற்றில் மிகவும் கஷ்டமானதொரு காலப் பிரிவைக் கடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் ஷூறா கவுன்ஸில் உதயமாகியுள்ளது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர் மூலம் முஸ்லிம்கள் சந்தித்த பிரச்சினைகளுக்குப் பிறகு, இன்றைய காலம்தான் இந்தளவு பிரச்சினைகளை சந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும் வகையில், முஸ்லிம் சமூகத்தின் சொந்த இருப்பே கேள்விக் குறையாகும் விதத்தில், அரசியல், சமய, பொருளாதார மற்றும் சமூகவியல் தளங்களில் பல்வேறு நெருக்குதல்களை கடந்த சில ஆண்டுகளில் சமூகம் சந்தித்து வருகிறது.

யுத்த காலத்தில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய முஸ்லிம் சமூகம், யுத்தத்தின் முடிவோடு நிம்மதிப் பெருமூச்சி விடலாம் என்று நினைத்தமை தற்போது பகல் கனவாகி விட்டது. நிம்மதிப் பெருமூச்சு, புனர்வாழ்வு என்பன ஒருபுறமிருக்க, சில அமைப்புக்களின் சண்டித் தனத்தை அவர்கள் தற்போது முகம் கொடுத்து வருகின்றனர். மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது அறியப் படாமல் இருந்த இவ்வமைப்புக்கள், புத்தரின் வழிமுறைக்கு முற்றிலும் முரணாகச் செயற்பட்டுக் கொண்டே, தம்மை பௌத்தர்களாகப் பிரகடனம் செய்து வருகிறார்கள். மைய நீரோட்ட சிங்கள சமூகத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் நோக்கில், இன மற்றும் மதவாதத்தை அடிப்படையாக வைத்த பாஸிச நடவடிக்கைகளில் வரிந்து கட்டிக் கொண்டு இச்சக்திகள் களம் இறங்கியுள்ளன.

உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த அம்சங்களை மட்டும் நோக்கினால் கூட, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மீறும் வகையில், 250 இற்கு மேற்பட்ட முஸ்லிம் வெறுப்புணர்வு நடவடிக்கைகள் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளன. யுத்த காலத்தில் கூட நாட்டில் இந்தளவு குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை.

இதில் அதிர்ச்சி தருகின்ற விடயம் யாதெனில், குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு அரச எந்திரம் தவறி இருப்பதுதான். சில இடங்களில் இவ்வாறான ரவுடித்தனம் பொலிஸாரின் கண் முன்னிலையிலேயே நடந்தேறின. இது இவ்வினவாத சக்திகள், “உத்தியோகபூர்வ” ஆசிர்வாதத்தோடு இயங்கி வருவதையே காட்டுகிறது.

கடந்த இரண்டறை ஆண்டு காலத்திற்குள் நாட்டின் இன ஒற்றுமை தொடர்பில் இச்சக்திகள் பெருமளவு பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். சிங்கள சிறார்கள், முஸ்லிம்களால் உரிமை கொள்ளப்பட்ட கடைகளில் பொருட்களை வாங்க மறுக்கும் அளவிற்கு, இவர்களது நஞ்சு பாய்ச்சும் வேலை நடந்திருக்கிறது. இப்போதுதான் பெரும் சேதத்தை உண்டு பண்ணிய யுத்தத்தில் இருந்து மீண்டிருக்கின்ற நாட்டின், அனைத்துக் குடிமக்களினதும் DSC 0174நலன்களை முன்வைத்து, வளர்ந்து வருகின்ற இச்சக்திகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இத்தகைய பின்னணியில், குறைந்தபட்சம் அரசாங்கத்தில் மொத்தமாக கூடாரமடித்து, கதிரைகளைச் சூடாக்கி வருகின்ற தமது பிரதிநிதிகளாவது இப்பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பி, முஸ்லிம் விரோதப் பிரசாரங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது நடக்கவில்லை. சமூகத்தின் தலைவிதியை அடகு வைத்தாவது அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டு, தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதைத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்பினார்கள். வெட்கமற்ற வகையில் தம்மைத் தெரிவு செய்த சமூகத்திற்கே சுமையாக இவ்வரசியல் பிரதிநிதிகள் மாறி இருக்கிறார்கள்.

இத்தகைய இக்கட்டான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கின்ற போது, கடந்த ஆண்டு ஜனவரி அளவில், முஸ்லிம் சமூகம் குறித்த அக்கறை கொண்ட பல்வேறு தளங்களைச் சேர்ந்தவர்கள், சமூகத்தைப் பாதுகாக்கவும், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பாரம்பரியமாக இருந்து வந்த சுமுகமான உறவைப் பாதுகாப்பது எப்படி என்றும் சிந்தித்தார்கள்.

இதன் விளைவாக, ஒரே கூரையின் கீழ் இக்குழுவினர் முதல் தடவையாக வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் வியாழன், 2, மே, 2013 அன்று சந்தித்துக் கொண்டார்கள். அதன் போது, இடைக்கால ஆலோசனைக் கவுன்சில் ஒன்று அறிவிக்கப்பட்டது. கவுன்ஸில் பொது சபையின் முதலாவது கூட்டம் கடந்த 25, ஜனவரி, 2014 அன்று இடம்பெற்றதோடு, நிரந்தர நிறைவேற்றுக் குழுவொன்றும் இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சூரா சபையின் தன்மை, பங்குபற்றுவதாகவும், பெருமளவிலானவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அனைவரையும் பிணைக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

அதன் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக, நாட்டில் அமைதி மற்றும் சமாதானம் என்பவற்றைப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்தையும் மேற்கொள்வது இருக்கும் என்பதோடு, சமூகங்கள் இடையிலான ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதற்கு தேசிய, சர்வ தேசிய சக்திகள் மற்றும் எல்லா சமூகங்களையும் சேர்ந்த கடும்போக்குக் கொண்டவர்கள் குறித்தும் தனது கவனத்தைச் செலுத்துவதும் அதன் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s