கிழக்கு மாகாணத்துக்கான தேசிய சூரா சபையின் விஜயம்

கடந்த (8,9.10.2016) சனி, ஞாயிறு தினங்களில் தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். தேசிய சூரா சபையின் தலைவரும் முன்னை நாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்அ வர்களது புதல்வருமான தாரிக் மஹ்மூத் அவர்களது தலைமையில் இவ்விஜயம் இடம்பெற்றது.

விஜயத்தின்போது கல்குடா மஜ்லிஸ் அஷ்ஷுரா, ஏறாவூர் பள்ளிவாசல்களது சம்மேளனம், காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களது சம்மேளனம், அம்பாறை மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெற்றன. அங்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தேசிய சூரா சபையின் நோக்கங்கள், எதிர்கால திட்டங்கள் என்பன பற்றி கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளுக்கு விளக்கமளிப்பது, பிராந்திய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரதானமான சவால்களை அந்த மக்களிடமிருந்தே கேட்டறிந்து கொள்வது, அதற்கான தீர்வுகளை காணும் மூலோபாயத் திட்டங்களைப் பற்றி ஆராய்வது, முஸ்லிம்கள் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே உடலின் உறுப்புக்களைப் போன்றவர்கள் என்ற இஸ்லாமியக் கருத்தைப் பலப்படுத்துவது என்பன  இந்த விஜயத்துக்கான பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன.

தலைவர் ஜனாப் தாரீக் மஹ்மூத்

மேற்படி விஜயத்தில் தலைமை உரை நிகழ்த்திய தேசிய சூரா சபையின் தலைவர் ஜனாப் தாரீக் மஹ்மூத் அவர்கள், இஸ்லாத்தில் ‘சூரா’ எனப்படும். கூட்டு ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வோரு பிரதேசத்திலும் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மிகச்சரியாக இனம்கண்டு அவற்றுக்கு தீர்க்கமான தீர்வுகளை காண்பதில் இந்த சூரா பொறிமுறைக்குப் பெரும் பங்குண்டு. தேசிய ரீதியில் சூரா கோட்பாட்டை நாம் அமுலாக்கி வருகிறோம். பிராந்திய ரீதியில் நீங்களும் அதனைக்கடைப்பிடிக்க வேண்டும். துறைசார்ந்த பிரச்சினைகளுக்கு துறைசார் நிபுணர்கள் (Sector Specialist) அழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு மூலோபாயத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சூரா சபைக்கு கிளைகளை நாடளாவிய ரீதியில் அமைக்கும் திட்டம் கிடையாது. ஆனால், பிராந்திய ரீதியில் இயங்கும் கூட்டமைப்புக்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து அவற்றைப் பலப்படுத்தி நெறிப்படுத்தும் பணியை மட்டுமே தேசிய சூரா சபை செய்யும். தேசிய ரீதியில் இயங்கும் 18 இயக்கங்களும் சமூக சேவை நிறுவனங்களும் தேசிய சூரா சபையில் அங்கம் வகிப்பதால் அது ஒரு குடை நிறுவனமாக (Umbrella Organization) ஆக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

[Best_Wordpress_Gallery id=”3″ gal_title=”NSC Gallery”]

சிராஜ் மஷ்ஹூர், அஜ்வதீன்

நிகழ்ச்சி நிரலில் அடுத்ததாக தேசிய சூரா சபையின் செயலக உறுப்பினரும் உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஆய்வாளருமான சிராஜ் மஷ்ஹூர்  மற்றும் தேசிய சூரா சபையின் செயலக உறுப்பினரும் இலங்கைப் பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஆய்வாளருமான அஜ்வதீன் ஆகியோர் தேசிய சூரா சபையின் தோற்றம், வளர்ச்சி, நோக்கங்கள், அதன் கடந்தகால, நிகழ்கால முன்னெடுப்புகள் போன்ற அம்சங்களைப் பற்றி விளக்கமளித்தனர். அவர்கள் தமது உரையில், முஸ்லிம் சமூக முன்னேற்றத்துக்கு கூட்டு முயற்சியின் அவசியம்  2012 ஐத் தொடர்ந்து வெகுவாக உணரப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாக பல செயற்பாடுகள் உருவெடுத்ததால் அவற்றை எதிர்கொள்ள துறைசார்ந்த நிபுணர்களும் புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் கைகோர்த்து ஆய்வுகளில் ஈடுபட்டு மூலோபாயத் திட்டங்களை வகுத்து செயல்படும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு தேசிய சூரா சபை உருவாக்கப்பட்டது. இலங்கை நாட்டின் ஒருமைப்பாடு அதன் வளர்ச்சி என்பதை பிரதான பொது இலக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி ஸ்தீரப்பாடு என்பதை குறிப்பான இலக்காகவும் கொண்டு அது இயங்கி வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

அடுத்து “தற்கால சூழலில் அமானிதங்கள் எனப்படும் எமது பொறுப்புக்கள்” எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்ட மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபை (Inter Religious Consultative forum) இன் முஸ்லிம்கள் சார்பான அங்கத்தவர்களில் ஒருவரும் தேசிய சூரா சபையின் உபதலைவர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் அவர்கள் உரையொன்றை நிகழத்தினார். தேசிய சூரா சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான மேற்படி நிகழ்ச்சிகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உயர் அரச அதிகாரிகள், உலமாக்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பள்ளிவாயல் தர்ம கர்த்தாக்கள் உள்ளிட்ட சமூகத்தில் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ள பலரும் வருகை தந்திருந்தமையால் அவரது உரை அவர்கள் அவ்வளவு பெரிய சமூக பொறுப்புக்களைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. நமது பொறுப்புக்களை சரிவரப்புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் வாழும் சூழல் பற்றிய சுருக்கமான விளக்கம் தேவை என்று அவர் தனது உரையை ஆரம்பித்த அவர் முஸ்லிம் சமூகம் பல்வேறு துறைகளில் பின்னடைத்திருக்கிறது என்பதை நிறுவும் வகையில் புள்ளிவிபரங்களுடன் தனது உரையை அமைத்திருந்தார்.

சர்வதேச ரீதியாக இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். நாகரீகங்களுக்கிடையிலான மோதல்கள் பற்றி எழுதும் பலர் (Islamophobia) இஸ்லாம் பற்றிய பீதியை உண்டு பண்ண களமிறங்கியிருக்கிறார்கள். ISIS போன்ற தீவிரவாதிக் குழுக்களது செயல்பாடுகளால் இஸ்லாம் கூட தவறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் முஸ்லிம் சமூகத்தின் தூய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு வேட்டு வைக்கும்  ஷீஆ, காதியானி போன்றன செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தை வேரறுக்கும் நோக்குடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல அமைப்புக்கள் இயங்குகின்றன. உள்ளார்ந்த பிரச்சினைகளில் ஆத்மீக வறுமை, மனித பலவீனங்கள், உட்பூசல்கள், அறிவினம், இஸ்லாம் பற்றிய அறிவில் குளறுபடி, வறுமை, தரமான தலைமைகளுக்கான பற்றாக்குறை, அரசியல்வாதிகளது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள், குடும்ப அமைப்பு எனும் நிறுவனம் ஆட்டம் காண்பது, வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பாதக விளைவுகள், இளைஞர் பிரச்சினைகள் போன்றனவற்றை குறிப்பிடமுடியும்.

முஸ்லிம் சமூகத்தின் 22% ஆனவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். 14% ஆன முஸ்லிம்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் உள்ளனர். சுகாதாரத் துறையில் முஸ்லிம் சமூகம் மிகவுமே பின்நிலையில் உள்ளது. பிறசமூகங்களுடனான உறவுகள் பலவீனமடைந்திருக்கின்றன. அவர்கள் எம்மைப் பற்றி தப்பான மனப்பதிவுகளுடன் வாழும் அதேவேளை அவர்களிற் சிலர் எம்மைப் பற்றிய மிகப்பிழையான கருத்துக்களை மீடியாக்கள் உட்பட இன்னும் பல வழிமுறைகள் ஊடாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இன உறவுகளை மென்மேலும் பலவீனமாக்குகிறது. பெரும்பான்மையினரைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களால் எப்படியுமே வாழ முடியாது என்பதால் மீள் நல்லிணக்கத்துக்கும் சமாதான சகவாழ்வுக்குமான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய உடனடித்தேவை இருந்துவருகிறது.

முஸ்லிம் சமூகம் பண்பாட்டுத் துறையில் வீழ்ச்சி கண்டிருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துவருகிறது. முஸ்லிம் சமூகத்தில் மதமாற்றம் தாராளமாக இடம்பெறுவதுடன் தனித்துவத்தை இழக்கும் நிலையில் பலர் உள்ளனர். 2014, 2015 பல்கலைக்கழக பிரவேசத்தை எடுத்து நோக்கினால் எமது விகிதத்தை விட மிகவும் குறைந்த மட்டத்திலேயே பெரும்பாலான துறைகளுக்கு மாணவர்கள் நுழைகிறார்கள். வர்த்தகப் பிரிவுக்கு 2.4%,  மிருக வைத்திய துறைக்கு 3%, பொறியியல் துறைக்கு 4.6% போன்ற தரவுகள் முஸ்லிம் சமூக கல்வி மட்டத்துக்கு சான்றுகளாகும். ஆனால், இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மையினர் என்ற வகையில் அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்தி எம்மை வளர்த்துக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. இதற்கெல்லாம் சமூகத்தின் தலைமைகளும் புத்திஜீவிகளும் துறைசார் நிபுணர்களுமே பொறுப்பானவர்கள்.

மறுமை நாளில் அல்லாஹ் உங்­­க­ளுக்கு வழங்­கி­யுள்ள நிஃமத்துக்­களை சமூக முன்­னேற்றத்­துக்­கா­­கவும் அதன் ஸ்தி­ரப்­பாட்­டுக்­கா­கவும் எந்­த­ளவு தூரம் பய­ன்ப­டுத்­து­னீர்கள், தியாகம் செய்­கி­றீர்கள் என விசா­­ரிப்பான். இது­ அமா­னி­த­மா­கும். பிரச்­சி­­னை­களைத் தீர்க்­க இஸ்லாம் ‘சூராவை’ சிறந்த அணு­கு­மு­­றை­யாகக் காண்­கி­றது. “(நபியே) நீர் அவர்­க­ளுடன் கலந்­தா­லோ­சிப்­பீ­ராக”, “அவர்கள் தமது விவ­கா­ரங்­களை கலந்­தா­லோ­ச­னை­யுடன் அமைத்­­­துக்­கொள்­வார்கள்” போன்ற குர்­ஆனிய வச­னங்­க­ளும் நபி­களார் (ஸல்) அவர்­­க­ளது வழி­காட்­டல்­களும் நடை­மு­றை­களும் இதனை வலி­யு­றுத்­­து­கின்­ற­ன.

எனவே, பிரச்­சி­னைகள் வந்­த­ பின்னர் தீர்­வு­களை காண்­ப­­தை­விட வர­முன்­னர் முன்­­னேற்­­பா­டு­களில் ஈடு­ப­டுவது அவசிய­மாகும். முஸ்லிம் சமூகத்­தி­லுள்ள மிகப்­­பெ­ரிய பிரச்­சினை உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டு­வ­தாகும். ஆய்வு, தூர­நோக்கு, சம­யோ­சிதம், கூட்­டான ஆலோ­சனை என்­ப­ன தான் இன்று தேவைப்­ப­டு­கி­றது. அதற்­கான களத்­தையே தேசிய சூரா சபை அமைத்­து­வ­ரு­கி­றது என்றும் அஷ்ஷைய்க் பளீல் தெரி­வித்­தார்.

பேரா­சி­ரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்

பேராதனைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் தேசிய சூரா சபையின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் அவர்­களும் உரை நிகழ்த்­தினார்.அவர் தனது உரையில்,  இலங்கையின் அரசியல் ரீதியான அடுத்து வரக்கூடிய நாட்களும் மாதங்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு மிக முக்கியமான காலகட்டமாக அமையவுள்ளது. எதிர்காலத்தில் வரப்போகும் அரசியல் ரீதியான தீர்மானங்களில் கிழக்கில் வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலைப்பாட்டினை ஒருமித்தும் உறுதியாகவும் குரலெழுப்ப வேண்டிய ஒரு முக்கிய தருணமாகும்.

இதில் முக்கிய விடயமாக அரசியலமைப்பு மாற்றம் எதிர்பாக்கப்படுவதுடன் மேலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக பல முக்கியமான தீர்வுத்திட்டங்கள் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே இக்காலகட்டத்தில் தங்களுடைய வேண்டுகோளையும்  அபிலாஷைகளையும் தெளிவாக எடுத்து வைப்பதற்கு முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட விடயங்களில் இதுவரையில் முஸ்லிம்களின் தெளிவற்ற தன்மையும் பலஹீனமான போக்கு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

கிழக்கு முஸ்லிம்கள் கடந்த கால யுத்தம் மற்றும் இனப்பிரச்சினைகளால் தமக்கேற்பட்ட பாதிப்பை சரியான முறையில் எடுத்துரைக்க தயாராக வேண்டும். உதாரணமாக ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு தேசிய ஷூரா சபை விஜயம் மேற்கொண்ட போது அவதானித்த முக்கியமான விடயம் யாதெனில் அங்குள்ள மக்கள் தங்களுடைய கவலைகளை வாய்மூலம் வெளிப்படுத்தினாலும் அதற்கு சான்றாக எந்தவொரு ஆவணமும் அவர்களிடம் இல்லை. இது இம்மக்கள் எதிர்வரும் தீர்வுத்திட்டங்களில் மூலம் நியாயம் பெற்றுக்கொள்ள தங்களை தயார் படுத்தாமையை காட்டுகிறது. குறிப்பாக கோரளைப்பற்று பகுதியில் மாத்திரம் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்று வரையும் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இழந்த சொத்துக்கள் பற்றிய ஆவணங்கள் இல்லாமையால் தத்தமது ஊர்களுக்கு திரும்பச்செல்லவோ சர்வதேசத்திற்கு முன் தங்கள் குறைகளை எடுத்து வைக்கவோ முடியாத நிலை காணப்படுகிறது.

மேலும் யுத்தம் நிலவிய காலத்தில் விரிவடைந்த தமிழ் முஸ்லிம் உறவை கட்டாயமாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. மொழி ரீதியாக ஒன்று பட்ட, ஒரே பிரதேசத்தில் வாழக்கூடிய இம்மக்களுக்கிடையில் பரஸ்பரம் புரிந்துணர்வை எற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.

தொகுதிவாரியும், கலப்பு முறையிலும் தேசிய ரீதியாகவும் (Proportional Representation) மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் அமைப்பு முறை மாற்றத்தின் விடயத்திலும் முஸ்லிம்களின் நிலைப்பாடு எது என்பதனை இதுவரை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கவேண்டும். இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு எந்த முறை உகந்தது என்பதில் தீர்மானம் எட்டப்பட்டு அவ்விடயத்தை தெரியப்படுத்துவதும் முக்கியமாகும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மூலமாக முஸ்லிம் தலைவர்கள் அறிவூட்டப்படல் வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பகுதி முஸ்லிம்களுக்கிடையில் இருக்கக்கூடிய ஊர்வாதம், பிரதேச வாதம், கட்சி பேதம் போன்றவற்றைக் களைந்து மிக நிதானமாகவும் ஒற்றுமைப்பட்டும் ஒருமித்த குரலில் தங்களுடைய தேவைகளை முன்வைப்பதுடன் அப்பகுதியில்  வாழக்கூடிய தமிழ், சிங்கள மக்களுடன் இருக்கக்கூடிய உறவின் விரிசல்களை களைந்து அவர்களுடன் மனிதபிமாண ரீதியாகவும் பரந்த மனப்பான்மையோடும் நடக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.இப்பிரதேசத்தில் வாழும் சிங்கள தமிழ் மக்கள் முஸ்லிம்கள் அவர்களுடன் நடந்து கொள்ளும்  முறைகளால் ஒரு விரக்தியான நிலையிலேயே உள்ளார்கள் என்பது குறிப்பாக சொல்ல வேண்டிய விடயமாகும். ஆகவே அவர்களின் இந்த மாற்றம் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் நாட்டின் பல்வேறு பட்ட பகுதியில் சிறுபான்மையாக வாழக்கூடிய ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்காலத்திட்கும் முக்கிய திருப்புமுனையாக இருக்குமென்பதையும் அவர்கள் உணரக்கடமைப்பட்டிருக்கிரார்கள்.அத்துடன் மற்ற சமூகங்களுடன் ஒன்று பட்டால் தங்களுடைய தேவைகளை எத்திவைப்பது இலகுவாகிவிடும் என்பதையும் அவர்கள்  உணரவேண்டும் என பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கலந்துகொண்டவர்களது பங்களிப்பு

நான்கு இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களுக்கு சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்களை வகிக்கும் பல தரப்பட்டவர்களும் வருகை தந்திருந்ததுடன் அவ்வப்பிரதேசங்களில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பான பலரும் கருத்துக்களை முன்வைப்பதற்காக சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டன. கோரிக்கைகள் முன்மொழிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் பிராந்திய முயற்சிகள் என்பனவற்றை உள்ளடக்கிய ஆவணங்களும்  தேசிய சூரா சபைக்கு வழங்கப்பட்டன. வருகை தந்திருந்தவர்கள் மிகவும் உற்சாகவும் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படலாகாது என்ற கருத்தை பலரும் வலியுறுத்தினர். முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் இழக்கப்பட்டிருப்பது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு மீளவும் கட்டியெழுப்பப்படுவதன் அவசியம் உள்ளது என்றும் பரஸ்பர நம்பிக்கையும் புரிந்துணர்வும் வளர்க்கப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டது. நிருவாக சேவைக்கு முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவது குறைவாக இருப்பதால் அத்துறைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளது தொகையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை சூரா சபை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களது ஒழுக்க, கல்வி வாழ்வு மிகவும் அடிமட்டத்தில் இருப்பதால் அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அர­சியல் தலை­மைகள் சமூக மட்டப் பிரச்­சி­னை­களை விளங்கிக் கொள்­வ­திலும் தீர்வு காண்­ப­திலும் விடும் தவ­றுகள் களை­யப்­பட்டு அவை மென்­மேலும் பலப்ப­டுத்­தப்பட வேண்டும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குள்ள பலத்­தை­விட சிவில் அமைப்­­புக்­க­­ளுக்­கான பலம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். பாட­சா­லை­களில் உள்­ள ஆசி­ரியர் பற்­றாக்­கு­றைக்குத் தீர்­வுகள் காணப்­பட வேண்டும். மீடி­யாக்கள் சமூக மேம்­பாட்­டுக்கு ஆற்­ற­வேண்­டிய பணிகள் பல இருக்­கின்­றன. ஆனால், அவை எதிர்­பார்த்த பணி­களில் ஈடு­ப­டு­வது குறைவு போன்ற பல்துறை சார்ந்த கருத்துக்களும் ஆதங்கங்களும் அங்கு முன்வைக்கப்பட்டன. தேசிய சூரா சபை சமூகத்தில் ஒரு பலமான அமைப்பாக மாறவேண்டும் என்ற கருத்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

கருத்துப் பரிமாறலுக்கு என்று அதிகநேரம் ஒதுக்கப்பட்டதுடன் அந்த நிகழ்ச்சியை தேசிய சூரா சபையின் முன்னை நாள் உபதலைவர்களில் ஒருவரும் அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முஸ்லிம் கல்விமாநாட்டின் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி ரஷித் எம்.இம்தியாஸ் நடாத்திவைத்தார். சபையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படுவதாகவும் தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் கூட்டம் நடைபெறும் போது அவை ஆலோசனைக்காக முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விஜயத்தின்போது தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் கொழும்பு பெரிய வாயல் பிரதம பேஷ் இமாமுமான மௌலவி எம்.தஸ்லீம், நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ரமீஸ் அபூபக்கர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி ருடானி ஸாஹிர், செயலக உறுப்பினர்களான சகோ. சதாத் (இஸ்லாஹீ), சகோ. இஹ்திஸாம் போன்றோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், கிழக்கு மாகாண முஸ்லிம்களது அபிலாஷைகளையும் தேவைகளையும், அபிப்பிராயங்களையும் நேரில் சென்று அறிந்துகொள்வதற்கான அருமையான சந்தர்ப்பமாக அது அமைந்ததாகவும் தேசிய சூரா சபை கருதுகிறது. முஸ்லிம் சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் கணிசமான அறிவுப் புலைமையாளர்களும், துறைசார் நிபுணர்களும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அந்த வளங்களை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான கூட்டிணைந்த திட்டங்கள் வகுக்கப்படுவதற்கான தேவை இருப்பதாகவும் தேசிய சூரா சபை கருதுகிறது.

இஸ்லாம் வலியுறுத்தும் ‘ஷூரா’ பொறிமுறையினூடாகவே இது சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில்தான் அல்லாஹ்வின் அருளும் நல்ல பல விளைவுகளும் கிடைக்கக் காரணமாக அமையும் என்றும் தேசிய சூரா சபை உறுதியாக நம்புகிறது. கிழக்கு மாகாண விஜயத்தின்போது அப்பிராந்திய மக்கள் சூராசபை உறுப்பினர்களை அன்பாக வரவேற்று உபசரித்தமைக்காகவும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டமைக்காகவும் உளமார்ந்த நன்றிகளை அது தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது.

கிழக்கு மாகாணத்தின் மற்றுமொரு மாவட்டமான திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயமொன்றை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சூராசபை மேற்கொள்ளவிருக்கிறது. வல்ல அல்லாஹ் எமது முயற்சிகளில் உளத்தூய்மையைத் தந்து எமக்கு பக்கபலமாக இருப்பானாக.

தேசிய சூரா சபையின் ஊடகப் பிரிவு

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s