பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நௌபர் (கபூரி) மௌலவி வசீம், மௌலவி ரொஷான் அக்தார் மற்றும் சகோதரர் இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உபகுழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம், உறுப்பினர்களான ஆசிரியர் நியாஸ், அஷ்ஷேக். ஷகீப் (தன்வீரி) ஜனாப் பவாஸ், ஜனாப் ரியாஸ் மற்றும் லாபிர் மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

12இச்சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் தோற்றம், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் கடந்த கால, எதிர் கால செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான மூலோபாய திட்டமிடல் (Strategic way forward ) பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு தமது அமைப்பின் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் நௌபர் (கபூரி) அவர்கள் தெரிவித்தார். மேலும் இதன் போது பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினால் ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றும் அந்நிலையத்தின் தலைவரிடம் சகவாழ்வுக்கான உப குழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம் அவர்களால் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த ஆலோசனை மன்றத்தின் (Consultative Forum) முதல் சந்திப்பு கடந்த  2016 நவம்பர்  17ம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

123

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை மையமாக வைத்து  இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ பார்ளுமன்ற உறுப்பினர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம். அமீர் அலி எம். முஜிபுர் ரஹ்மான், காதர் மஸ்தான், எம். மன்சூர், இஸ்ஹாக்  அப்துல் ரகுமான், எம். எஸ். தவ்பீக், அப்துல்லாஹ் மஹரூப் மற்றும் அலி சாகிர் மௌலானா ஆகியோரும், தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே. தரிக் மஹ்முத் அவர்களின் தலைமையின் கீழ் தேசிய ஷூரா சபையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பல்துறை வல்லுனர்கள் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பங்குபற்றினார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கான சாதக பாதகங்கள், மற்றும் அத்திட்டத்தில் சமூகத்தில் கவனிக்கப்படாத விடயங்கள் போன்றன  பற்றிய ஒரு சுருக்க உரையை தேசிய ஷூரா சபையின்செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சகோ.எம்.அஜ்வதீன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகள், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், ஆசிரியர் நியமனங்களில் காட்டப்படும் பொடுபோக்குகள், முஸ்லிம்களின் சுகாதார நிலைமைகள் போன்றன பற்றி கவனம் செலுத்தப்ப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ’இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய சமூகப் பொருளாதார நிலை’ எனும் தொனிப்பொருளில்  தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளரும் வரி மதிப்பீட்டுத் திணைக்கள ஆணையாளருமான அஷ்ஷெய்க் என்.எம்.மிப்லி (நளீமி) அவர்களால் ஓர் உரை நிகழ்த்தப்பட்டது. இலங்கையின் மொத்த சனத் தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் சராசரி 6% ஆக இருக்கையில் இலங்கை முஸ்லிம்களில்  21%ம் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டின் கீழ்  நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும்,பொதுவாக முஸ்லிம்கள் ஒரு வியாபார சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டாலும் உண்மையில் மற்ற சமூகத்தவர்களுடன் ஒப்பீட்டு ரீதியில் பார்க்கையில் ஒரு பின்தங்கிய சமூகமாகவே உள்ளனர் என புள்ளிவிபரங்கள் மற்றும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினார்.

photo577815776286845032

இந்நிகழ்வில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் இந்த வரவு செலவுத்திடத்தில் முஸ்லிம் சமூகதின் நலன்களோடு தொடர்பான விடயங்களில் தங்களினாலான முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்தனர். அத்தோடு முஸ்லிம் சமூகத்தின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக கொழும்பு மத்தியப் பிரதேசத்தில் தற்போதுள்ள பாடசாலைகளில் முதலாம் ஆண்டிற்கான பிள்ளைகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள், அங்கு மேலதிகமாக பாடசாலைகள் தேவைப்படுவதன் முக்கியத்துவம், பாடசாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதியற்ற நிலைமை,  மக்களின் பொருளாதார நிலை, அரசாங்க பாடசாலைக்கு சேர்க்க முடியாமையால் சர்வதேச பாடசாலைகளுக்கு தங்களது பிள்ளைகளை சேர்த்துவிட்டு வறுமையின் காரணமாக இடை நடுவில் கல்வியை விட்டுவிடுபவர்களின் எண்ணிக்கையில் உள்ள அதிகரிப்பு, தொழில்வாய்ப்பின்மை  போன்றன அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அவ்விடயங்களில் அரசாங்கத்துக்கு உதவியாக முஸ்லிம் வியாபார சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இருக்கின்ற பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது. அத்தோடு தேவையென அடையாளம் காணப்பட்ட இடங்களில் புதிய பாடசாலைகள் நிர்மானிப்பதற்காக அரசாங்க ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்விற்கு முஸ்லிம் (BUSINESS COMMUNITY) வியாபார சமூகத்தை  சேர்ந்த சில பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிட்த்தக்கதாகும். அவர்கள் தமது வியாபாரத்தைத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அச்சிக்கல்களிளிருந்து வெளிவர எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் ஒரு நபரின் குறைந்த வருமான அளவினை திடீரென அதிகரித்தமையானது முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் சம்பந்தப்பட்டுள்ள  வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், குறைந்த வருமானத்தின் விடயத்தில் மற்ற நாடுகளுடனும் உலக சந்தையுடனும்  போட்டியிட முடியாவிடின் மத்திய கிழக்கு மற்றும் இதர நாடுகள் இலங்கைக்கு வழங்கும் வீசா முற்றாக தடைப்பட சாத்தியமுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இலங்கைக்கு வரும் அந்நியச்செலாவணியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒரு மிக முக்கிய பங்களிப்பு செய்வது பற்றியும் பேசப்பட்டது. அதற்குப்பகரமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் தகமைகளை(Skilled Qualification) அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதன் மூலம் குறைந்த வருமானத் தொகையை அதிகரிக்க முடியுமெனவும் கூறபட்டது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாகவும் உணர்த்தப்பட்டது.

அத்தோடு ஏற்றுமதியாளர்களின் சார்பாக விடப்பட்ட கோரிக்கையில் ஏற்றுமதிக்காக மொத்த வருமானத்தில் செலுத்தும் “CESS” வரிக்குப் பகரமாக மொத்த இலாபத்தில் அறவிடப்படும் வரியினை (Income Tax) அறவிடும்படியும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. இவ்விடயத்திக்குப் பதிலளிக்கையில்  அது பற்றி ஆராய்ந்து முடியுமான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மேற்படி சந்திப்பின் போது, 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் போது அவர்கள் பயன்படுத்துவதற்கு உதவியாக  அமையலாம் எனக் கருதப்பட்ட சில ஆவணங்கள் அடங்கிய ஒரு கோப்பு அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமக்கு அழைப்புவிடுக்கப்படுவதை இட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தொடர்ந்தும் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

குருனாகல் மாவட்டத்தின் மும்மானை எனும் கிராமத்து முஸ்லிம்கள் இனவாதிகளது செயற்பாடுகளால் பொருளாதார ரீதியான ஒதுக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு தேசிய ஷூரா சபைக்கு மும்மானைக் கிராமத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கான சந்தர்ப்பமும் அன்றைய கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்

அல் மஷூரா: வெளியீடு 08

தஸ்கியத்துன் ந.ப்ஸ் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதே வெற்றியின் முதல் படித்தரமாகும்.

நிச்சயமாக எவன் (தனது) ஆன்மாவை தூய்மைப்படுத்தினானோ அவன் வெற்றி பெற்றான். எவன் அதை அசுத்தப்படுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான் -அல் குர்ஆன் 91:9,10
இலங்கைக்கு GSP+ சலுகையை வழங்குவதற்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருப்பதை கண்டித்து தேசிய ஷூரா சபை ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. தேசிய ஷூரா சபையானது தேசிய மட்டத்தில்; இயங்கக் கூடிய 18 முஸ்லிம் அமைப்புக்களை கொண்டதொரு ஒருங்கிணைப்பாவதுடன், இலங்கையை புவியரசியல் ரீதியில் நெறுக்கும் தனது முயற்சியில் ஒரு அங்கமாக நல்லாட்சி, வெளிப்படைத் தன்மை மற்றும் நீதி என்ற போர்வைகளில், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை தேவையற்ற விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வம்பிற்கு இழுப்பதை இச்சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளை சார்ந்த அமைப்பக்களின் வற்புறுத்தல்களின் விளைவாகவும் ராஜபக்~ அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த GSP+ சலுகை அப்போது நீக்கப்பட்டது. ஆனால், இதற்கும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. இச்சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் படி ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துவதானது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஒரு முறையற்ற செயலாகும். அது மட்டுமன்றி அதற்கு எதிராக முஸ்லிம்கள் குரல் எழுப்பும் நிலை உருவாகும் போது, GSP+ சலுகை இலங்கைக்குக் கிடைப்பதற்கும் அதன் ஊடாக ஏற்படும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முஸ்லிம் சமூகம் தடையாக இருப்பதாக அதை தென்படச் செய்து, இங்குள்ள ஏனைய இனங்களுடன் முஸ்லிம்களுக்கு பகைமை ஏற்படத்துவதற்கான ஒரு சதியுமாகும். எனவே இது நமது அரசியல் தலைவர்கள் தெளிவாக புறிந்து கொள்ள வேண்டியதொரு ஆபத்தான நிலையாகும்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமானது அரசியல் சாசனத்தில் உட்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தைச் சார்ந்த, அவர்களுடைய ஒரு சொந்த விடயமாகும். மாறாக, இதற்கும் இலங்கையின் தேசிய பொருளாதாரம் அல்லது பணியாளர் மற்றும் தொழில்துறை உற்பத்தித் திறன் இடையே எவ்வித தொடர்புமில்லை. அது தவிர, சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு நாடாகவும் இலங்கை கருதப்படுவது கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி முயற்சியை நாம் கண்டிப்பதோடு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் ஒன்றாகவும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு சொந்த விடயமாகவும் எடுத்தக் கொள்ளும் படி நல்லாட்சி அரசை கேட்டுக்கொள்ளும் அதே வேளை, இலங்கையின் ஒரு சமூகத்தை ஏனைய சமூகங்களுடன் மோத விடுவதற்கு உள்நாட்டு விடயம் ஒன்றில் தலையிடுவதன் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக மேற்கொள்ளும் இந்த சதியின் உட்கருத்தை புறிந்து கொள்ள முயற்சிக்குமாறு பொதுமக்களையும், தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களையும், ஏனைய முன்னணி இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் அல்லாத அமைப்பக்களையும் தேசிய ஷூரா சபை கேட்டுக் கொள்கின்றது.

மேலும், அநாவசியமாக அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் மோதிக் கொள்ளும் ஒரு சூழலையும், அதைத் தொடர்ந்து அரசின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மந்தகதியாக்கிவிடும் ஒரு நிலையையும், அத்துடன் சில பிரிவினர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளி விடும் ஒரு நிலையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி வலியுறுத்தல் உருவாக்கி விடும் அபாயமும் உள்ளது.

தேசிய ஷூரா சபையானது இலங்கையின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, தேசத்தின் சுபீட்சத்திற்காக கட்சி அரசியலை புறக்கனித்து, ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும்; பூரண ஒத்துழைப்பை வழங்க அது என்றும் சித்தமாகவுள்ளது. தேவையற்ற வெளிப்புற தலையீடுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் தீய உள்நோக்கம் கொண்ட அரசியல் பித்தலாட்டங்களும் சமூகத்தின் சில குழுக்களை தீவிரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்லும் சாபக்கேடுகள் ஆகும். இது ஒவ்வொரு பிரஜையும் இனங்கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் விவகாரத்திற்கு எதிராக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) செயற்பட்ட விதத்திலேயே இது ஊர்ஜிதமாகின்றது.

அனுபவமிக்க, முதிர்ந்த மற்றும் முன்னணி இஸ்லாமிய அமைப்புக்கள் இப்பிரச்சினை விடயத்தில் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானத்துடனும் செயற்பட்ட அதே வேளை பிரதான முஸ்லிம் அமைப்புக்களில் ஒன்றாக பொதுவாக கருதப்படாத இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் சில இள இரத்தங்களும் பதற்றத்தைத் தூண்டும் விதத்திலும் முறையற்ற விதத்திலும் செயற்பட்டு இந்த விவகாரத்தை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான ஒரு பிரச்சினையைத் தூண்டி இனங்கள் இடையே பகைமையும் இனவாதத்தையும் தூண்டி விடும் ஒன்றாக மாறும் ஆபத்தான சூழலை உருவாக்க அண்மித்ததை கண்டோம்.

இந்த அடிப்படையில் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய அண்மைய ஆர்பாட்டத்தை, முறையற்ற மற்றும் இஸ்லாத்திற்கு புறம்பான விதத்திலேயே மேற்கொண்டதாக நமது சபை கருதுகின்றது. இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் மேற்படி ஆர்பாட்டத்தை மேற்கொண்ட விதத்தைக் கண்டிக்கும் அதே வேளை, அவர்களுடைய சமூக மற்றும் மார்க்கப் பற்றையும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் கை வைப்பதன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீய உள்நோக்கத்திற்கு எதிராக அவர்கள் வெளிப்படுத்திய தேச பக்தியையும் தேசிய ஷூரா சபை பாராட்டுகின்றது.

அதே சந்தர்ப்பத்தில், நிதானமின்மை மற்றும் ஆவேசமானது தம்மை தீவிரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்லலாம் என்ற விடயத்தையும், அதன் மூலம் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் பற்றி நிலவும் நல்லெண்ணம் பழுதடைந்து விடலாம் என்பதையும், இறுதியில் சமூகத்திற்கு நன்மையை விட தீங்கையே தமது செயற்பாடுகள் ஏற்படுத்தும் என்பதையுதம் அவர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

முஸ்லிம்கள் என்ற விதத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சரியானவையாகவும், ஒழுக்க விழுமியங்களின் எல்லைகளுக்கு உட்பட்டவையாகவும், வல்ல அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுபவையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது நமது கட்டாயக் கடமையாகும். முஸ்லிம்கள் என்ற ரீதியில் நமது சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பல நமக்கு உள்ளதோடு, மனித இனத்தின் தேவைகளுக்கு குரல் கொடுக்கும் சிறந்த முஸ்லிம்களாக தகைமை பெறுவதற்காக தஸ்கியதுன் நஃப்ஸ் ஊடாக நமது ஆன்மாக்களை தூய்மைப்படுத்திக் கொள்வதும் நமது கடமைகளில் ஒன்றாகும் என்பதையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

2016 நவம்பர் 19

கௌரவ விஜேதாச ராஜபக்ஷ அவர்கள்,
நீதி அமைச்சர்
நீதி அமைச்சு,
கொழும்பு

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே!

கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக மேற்கொண்ட தவறான கூற்றுக்கள் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீர விசாரிக்காமல், முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ள சில அமைப்புக்களின் பெயர்களை குறிப்பிட்டு, வரவு செலவு திட்டம் தொடர்பான உரையின் போது அதனுடன் எந்த வித சம்பந்தமுமில்லாத ஒரு விடயத்தை பற்றி தவறான தகவல்களை தாங்கள் வெளியிட்டுள்ளமை நம் சமூகத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனங்கள் மத்தியில் அநாவசிய பதற்ற நிலை உருவாகியுள்ளதுடன் மீண்டும் துளிர் விட்டு வரும் அமைதிக்கும் சமாதானத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியை சீர்குலைப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் அரச விரோத சக்திகள் பௌத்த – முஸ்லிம் கலவரம் ஒன்றை தூண்டிவிட சதி செய்து வருகின்றனர் என அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தாங்கள் மேற்கொண்ட மேற்படி பொறுப்பற்ற கூற்று அமைதியையும் ஐக்கியத்தையும் விரும்பும் இலங்கையர் மத்தியில் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளை குழப்பங்களை விரும்பும், தீவிரவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு தங்களுடைய கூற்று மேலும் எரிபொருளை வழங்கியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தங்களுடைய அக்கூற்றின் பின்னர் கண்டி போன்ற பகுதிகளில் மதவாதிகளும் இனவாதிகளும் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய கோஷங்களை எழுப்பியமை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். இந்த நிலை பூதாகாரம் பெரும் பட்சத்தில் நல்லாட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டவராக தாங்கள் குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறான ஒரு இட்டுக்கட்டு தங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதே எமது உளமார்ந்த பிரார்த்தனையாகும்.

பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களின் போர்வையில், அடிப்படையற்ற தகவல்களை பொருத்தமற்ற விதத்தில் கூறுவது முக்கிய அமைச்சொன்றின் அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சட்டதரணி ஒருவரான தங்களுக்கு சிறிதும் பொருத்தமற்ற செயலாகும். அது மட்டுமின்றி தேசத்தின் அதியுயர் சட்ட சபையில், இந்நாட்டுப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்பே மேற்படி கூற்றை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் குற்றம் சாட்டும் விடயங்கள் தொடர்பான திகதிகள், பெயர்கள், இடங்கள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைக்குமாறு நீங்கள் அப்பிரதிநிதிகளால் வலியுறுத்தப்படும் பட்சத்தில் உங்கள் நிலை என்னவாகும் என நீங்கள் சற்று சிந்தித்திருக்க வேண்டும். அதை விடுத்து, முஸ்லிம் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள அமைப்புக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக, அவற்றில் கல்வி கற்பிக்கும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சிறார்களுக்கு தீவிரவாதத்தை போதிக்கின்றனர் என்றும், இங்குள்ள 4 முஸ்லிம் பிரிவுகளின் அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்கள் என்றும், எங்கோ ஒரு நபர் சிறுமி ஒருத்தியை மணம் புறிந்துள்ளார் என்றும் ஆதாரமற்ற செய்திகளை பாராளுமன்றம் போன்ற ஒரு உயரிய ஸ்தானத்தில் கூறுவது புகழ்பெற்ற தங்கள் சட்ட வல்லமையையே சந்தேகம் கொள்ளச் செய்;துவிடும்.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டினாற்போல், நான்கு இலங்கை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிறுமிகள் உட்பட 32 பேர் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள் என்றும் நீங்கள் ‘தகவல்’ வெளியிட்டுள்ளீர்கள். சதிகார இஸ்ரேலின் கோர நிகழச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக ISIS அமைப்பை யார் உருவாக்கினார்கள், யார் அதற்கு பயிற்சி வழங்கினார்கள், யார் அதற்கு நிதி வழங்குகின்றார்கள் போன்ற மர்மங்கள் தொடர்பான உண்மைகள் வெளியாகியுள்ள நிலையிலேயே தாங்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்துள்ளீர்கள்.

பல காலம் தொட்டு ISIS அமைப்புடன் இணைவதற்காக, அவ்வமைப்பால் மூலை சலவை செய்யப்பட்டவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து சிரியாவிற்கு செல்வது பற்றி சகலரும் அறிவர். இதற்கான காரணம் இவ்வுலகை திரை மறைவில் இருந்த வண்ணம் ஆட்டிப்படைக்கும் சில வல்லரசு சக்திகள் தான் என்ற விடயமும் உலகறிந்ததே. இது தற்காலத்து புவியரசியலின் ஒரு மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

இது தொடர்பாக தாங்கள் அறியாத அல்லது மறந்து விட்டுள்ள ஒரு விடயத்தை நான் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன். அதாவது, ISIS அமைப்புப் பற்றி நம் நாட்டு ஊடகங்கள் அதிக அக்கறையுடன் தகவல்களை வெளியிட்டு வந்த 2015 காலக் கெடுவில் நாட்டின் முக்கிய முஸ்லிம் அமைப்புக்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படை பிரதானிகள், பொலிஸ் மாஅதிபர், உளவுப்பிரிவின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரை பிரதம மந்திரி அவர்கள் அழைத்து அவ்வமைப்பு மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட வதந்திகள் பற்றி விசாரித்தார். அதன் போது ஏனைய சிலருடன், அழைப்பின் பேரில் சென்ற நாமும் அக்கலந்தாலோசிப்பில் பங்கேற்றேன்.

அதன்போது பங்கேற்ற அனைவரது மெச்சத்தகு ஒத்துழைப்பு, தொடர்பாடல், ஒருங்கிணைப்பின் பயனாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துடன் தொடர்பான உயர் அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதானிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த கலந்தாலோசிப்பின் பின் அப்போது முஸ்லிம்கள் பற்றி எழுப்பப்பட்ட பல வீண் சந்தேகங்கள் முற்றாக நீக்கப்பட்டன. இதற்காக அரசாங்கம் காட்டிய அக்கறை மற்றும் உளவு அமைப்புக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நாம் பெரிதும் போற்றினோம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க மக்கள் பிரதிநிதிகள் முன் எழுந்து நின்று எவ்வித ஆதாரமும் இன்றி மடை திறந்தாற் போல அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை தாங்கள் முன்வைத்துள்ளீர்கள். பலமான ஆதாரங்களுடனும் அசைக்க முடியாத சாட்சிகளுடனும் உளவுத் துறையின் அறிக்கைகளுடனேயே அதை நீங்கள் செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கூற்றுக்களால் பாராளுமன்றம் போன்ற ஒரு உயர்வான சபைக்கு எவ்விதப் பிரயோசனமும் கிடையாது.

இருப்பினும் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்த தருணம் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு தூண்டுதலாகவே இருக்கும்.

அது தவிர, நமது நாட்டிற்கு வருகை தர எண்ணியிருந்த முதலீட்டாளர்கள் எத்தனை பேர் தங்களது மேற்படி கூற்றினால் குழப்பமடைந்து தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா?

மேலும், தங்கள் பொறுப்பற்ற கூற்று மூலம் அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்பக்களுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா?

அது மட்டுமன்றி, அமைதியை விரும்பும் பெரும்பான்மை நாட்டு மக்களுக்கு இதன் மூலம் ஏற்படும் மன அழுத்தம் பற்றி நீங்கள் யோசித்தீர்களா?

அல்லது இது பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டமிட்டதொரு முன்னுரையா?

சகவாழ்வு மற்றும் அமைதியை நிலைநாட்டவும், பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த பிரிவினைவாத மோதலினால் சின்னாபின்னமாகிப் போன தாய்த்திருநாட்டை கட்டியெழுப்பவும் வேற்றுமை பாராது சகல இன மக்களும் கைகோர்த்து நிற்கும் தற்போதைய நல்லாட்சி காலகட்டத்தில் இது போன்ற பிரிவினையை ஏற்படுத்தும் கூற்றுக்களை வெளியிடுவதில் உள்ள விவேகம் தான் என்ன? தங்களைப் போன்ற புகழ் பெற்ற மேதை மற்றும் அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த தடுமாற்றம் தொடர்பாக நம்மால் ஊகிக்கக் கூடிய ஒரே விளக்கம் தவறான தகவல்கள் தங்களுக்குத் தரப்பட்ட நிலையில் இது போன்றதொரு கூற்றை நீங்கள் பாராளுமன்றத்தில் கூறியிருக்க வேண்டும் என்பதே.

அவ்வாறிருப்பின், மேற்படி தவறான தகவல்களை தங்களுக்குத் தொகுத்துத் தந்தவர்கள், அதன் மூலம் ஒரு அமைச்சர் என்ற தங்களுடைய தற்காலிகமான கண்ணியம்; எவ்வாறிருப்பினும், ஒரு கற்றறிந்த முதல் தர சட்டதரணி என்ற அடிப்படையில் தங்கள் கீர்த்திக்கு ஏற்படும் மாசு பற்றி சிறிதும் சிந்தித்தப் பார்த்ததாகத் தெரியவில்லை.

இவ்வாறான தர்மசங்கடத்திற்கு உட்படுத்துபவர்களால் தாங்கள் சூழப்பட்டிருப்பீர்கள் எனில்,

முஸ்லிம்கள் பற்றிய கூற்றுக்களை வெளியிடுவதற்கு முன் அவை தொடர்பான மிகச்சரியான தகவல்களை தந்து தங்களுக்கு ஒத்தாசை வழங்குவதற்கு தேசிய ஷூரா சபை என்றும் தயாராக இருப்பதாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தாரிக் மஹ்மூத்

தலைவர்,

தேசிய ஷூரா சபை

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு  வெள்ளிக்கிழமை (18.11.2016) குத்பாப் பிரசங்கத்தை கதீப்மார்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக் கொள்வது நல்லது என தேசிய ஷூரா சபை கருதுகிறது:

  1. முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவோ பெரும்பான்மையினராகவோ வாழ்ந்த போதிலும் பிற சமுதாயத்தவர்களது மத, கலாசார, தனித்துவங்களை கொச்சைபடுத்தாமல் அவர்களுடன் சகிப்புத்தன்மையோடு , சமாதான சகவாழ்வைப் பேணி வாழும்படியே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அ.  பிறர் வணங்கும் தெய்வங்களை ஏசலாகாது (06:108)

ஆ. மார்கத்தை பலாத்காரமாக திணிக்கலாகாது (2:256)

இ.முஸ்லிம்களுக்கு மத்தியில் பிறசமயத்தவர்கள் வாழ்வதற்கு இஸ்லாம் அங்கீகாரமளித்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகளையும் அது வழங்கியுள்ளது.மதீனாவில் யூத,கிறிஸ்தவர்கள் மதீனா சாசனத்தின் பாதுகாப்பின் கீழ் ‘திம்மீக்கள்’ என்ற கௌரவமான நாமத்துடன் வாழ்ந்தார்கள்.

  1. பிற சமயத்தவர்கள் அல்லாஹ்வையோ அவன் தூதரையோ இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ விமர்சிக்கும் போது அவற்றை வன்முறையாலும் கடும் சொற்களினாலும் எதிர்கொள்ளாமல் மிகவும் அழகிய வழிமுறைகள் மூலமே எதிர்கொள்ளவேண்டும். (23:96), (41:34) மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அல்லாஹ் பிர்அவுனிடம் அனுப்பிய போது மிருதுவான பேச்சு மூலம் தகவல் பரிமாறும்படியே கட்டளையிட்டான். (20:44)
  1. விதண்டாவாதம், குதர்க்கம், மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள் என்பவற்றைத் தவிர்த்து ,பண்பாடன முறைகளிலேயே உரிமைப் போராட்டங்களும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற வேண்டும். அப்படியல்லாத அணுகுமுறைகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  1. குறிப்பாக Social Media – சமூக வலைத்தளங்களில் பிறசமயத்தவர்களை சீண்டும் வகையில் அபிப்பிராயங்களை (Comments) இடுவதையும் ஆக்கங்களை எழுதுவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை நீக்கி சகவாழ்வைத் தூண்டும் குறிப்புக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனாவசியமான , பீதியை உண்டுபண்ணும் தகவல்கள் சமுதாயத்தில் அவநம்பிகையைத் தோற்றுவிக்கும்.
  1. சமூகவலைத்தளங்களில் வரும் எந்தவொரு தகவலும் முதலில் ஊர்ஜிதமானதா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் அரசியல் நோக்கம் கொண்டவர்கள், நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு மாற்றும் எண்ணமுள்ளவர்கள், நாட்டை இனமுறுவல் நிலைக்கு தள்ளி குளிர்காய விரும்புபவர்கள் அந்த தகவல்களை உருவாக்கியிருக்கலாம். ஒரு முஸ்லிம் முதலில் தகவல்களை ஊர்ஜிதம் செய்யாது பரப்பமாட்டான். அப்படி பரப்புவது பாவமாகும் , பெரும்குற்றமாகும்.(49;06) அவனது பொறுப்பற்ற நடத்தைக்காக அவன் மறுமையில் விசாரிக்கப்படுவான். (17:36), அச்சமூட்டும் தகவலொன்று கிடைத்தால் அதனைப் பரப்ப முன்னர் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நேரடியாக சம்பத்தப்பட்டு அதன் நம்பகத்தன்மையை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.(4:83)
  1. தகவல் ஊர்ஜிதமானதாக இருந்தாலும் அதனைப் பரப்புவதால் நன்மை அதிகம் விளையுமா, தீமை அதிகம் விளையுமா என்பதை தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சமூகங்களை இணைப்பதற்கும் , மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமே ஊடகங்கள் பயன்படவேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஆளுக்கேற்ற, சந்தர்பங்களுக்கேற்ற முடிவுகளையே எடுத்திருக்கிறார்கள்.
  1. இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக, சிதறுண்ட கிராமங்களில், பிறசமுகங்களில் அதிகமாக தங்கி வாழ்வதால் பிறசமுகத்தவர்களைப் பகைத்துக்கொண்டு, அவர்களிலிருந்து விலகி , தூரமாக வாழக்கூடாது. அவ்வாறு வாழ்வது பெரும் பாதிப்புகளை உண்டு பண்ணும் , இன்னும் எம்மைப் பலவீனப்படுத்தும். எனவே , உறவுகளைப் பலப்படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, பலவீனப்படுத்தும் முயற்சிகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் எந்தவொரு இனமும் மற்றோர் இனத்தின் பால் தேவைப்பட்ட நிலையில் தான் வாழ்ந்துவருவதை ஒருபோதும் நாம் மறக்கலாகாது.
  1. உரிமைகள் பறிக்கப்படும் போதும் அத்துமீறல்கள் இடம் பெறும் போதும் சமாதான , ஜனநாயக ரீதியான , அறிவுபூர்வமான அணுகு முறைகளையே நாம் கையாள வேண்டும். ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் உடனுக்குடன் ஊர், பிராந்திய தலைவர்களது ஆலோசனைகளைப் பெற்று, பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்யலாம். மேலும், பிரதேச அரசியல்வாதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி நடவடிக்கைகளை எடுக்கலாம். மாறாக, ஏட்டிக்கு போட்டியாக கலவரங்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி நிர்வாக சபைகள், இயக்கங்கள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவ்வப் பிரதேசங்களில் உள்ள பிறமதத் தலைவர்களோடு சுமூகமான உறவுகளைப் பேணி பிரச்சினைகள் வரும் போது அவர்களுடன் தொடர்பு கொண்டு மத்தியஸ்த முயற்சிகளை ஏற்படுத்தலாம். ஹுதைபியாவில் போல விட்டுகொடுப்புகளும் சில போது தேவைப்படலாம்.
  1. ஒரு முஸ்லிம் எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்கலாகாது, உணர்ச்சிகளுக்கு அடிமைபடலாகாது. அழகிய பண்பாடுகள், குணநலன்களை அவன் அணிகலன்களாகப் பெற்றிருப்பான். மனிதர்களது மனங்களில் அவன் வாழ்வான். நபி(ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் நல்ல பண்பாடுகளுடன் வாழ்ந்ததாக கதீஜா நாயகி (ரழி) சான்று பகர்ந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பணத்தை, அதிகாரத்தை , ஆயுதத்தைக் காட்டி அல்லாமல் பண்பாடுகளை மூலதனமாகக் கொண்டே பிரசாரம் செய்தார்கள்.
  1. சகோதர இனங்களைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எவ்வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தாமல் எம்மால் முடியுமான சகல விதமான மனிதாபிமான உதவிகளையும் அவர்களுக்குச் செய்து அவர்களுடனான உறவுகளை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  1. வதந்திகளைப் பரப்புவதில் இருந்தும் கூட்டம் கூட்டமாக பாதை ஒரங்களில் நின்று கதைத்துக் கொண்டிருப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்வோமாக!
  1. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களின் போது நம்பகத் தன்மையோடும் நீதி நியாயமாகவும் மிகுந்த தாராளத் தன்மையோடும் நடப்பதோடு , அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் தமது கடமைகளுக்கு உரிய நேரத்தில் செல்வதோடு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை திறம்படவும் அல்லாஹ்வுக்குப் பயந்தும் நிறைவேற்ற வேண்டும். காரியாலயங்களில் பணி புரியும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் சிநேகபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்பி அவர்கள் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்களது நட்த்தைகள் பற்றியும் எழுப்பும் வினாக்களுக்கு அறிவு பூர்வமான உரிய பதில்களை வழங்கும் வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.பதிலளிக்கத் தெரியாத போது பதிலை பின்னர் கூறுவதாகத் தெரிவிக்கலாம் . முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற அறிவாளிகளை அணுகி பதில்களை தயார் செய்து கொள்ளல்லாம் குதர்க்கம் நல்ல விளைவுகளைத் தரப்போவதில்லை.
  1. முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியிலுள்ள சற்று தீவிரமாக சிந்திப்போரை நாம் ஒதுக்கிவிடாமல் அவர்களை நெறிப்படுத்தி சமூகத்திற்குள் பிளவுகள் ஏற்படாதிருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குத்பாக்களிலும் சமூக வலைத்தலங்களிலும் எவரையும் தாறுமாறாக விமர்சிப்பதைத் தவிர்ப்போமாக!
  1. ஆனால், சமாதான சகவாழ்வு என்ற பெயரில் ஈமானுக்கு விரோதமாக செயல்படுவதிலிருந்தும் தெளிவான ஹராம்களில் சம்பந்தப்படுவதிலிருந்தும் நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும். “கரைந்து போகாமல் கலந்து வாழ்வதற்கும்”, “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும்” முன்னுதாரணமாக செயல்படுவது அவசியமாகும்.
  1. தேசத்தை கட்டியெழுப்பவும் நீதி, நியாயம் மற்றும் ஒழுக்க விழுமியங்களை ஸ்தாபிக்கவும் பரஸ்பரம் ஏனைய இனங்களோடு கைகோர்த்துக் கொண்டு நாம் இலங்கையரான முஸ்லிம்கள் என்பதை நடைமுறையில் காட்டுவோமாக.
  1. எப்போதும் ஒரு முஸ்லிம் ஆழமான ஈமானோடும் இபாதத்களால் கிடைக்கும் உளப் பலத்தோடும் வாழ வேண்டும். துன்பங்களின் பொழுதும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போதும் அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவன் நாடியது அன்றி வேறு எதுவும் நடக்காது என உறுதியாக நாம் நம்புவோமாக.மேற்படி அம்சங்களை உள்ளடக்கிய வகையில் ஜும்ஆ குத்பாக்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது இடம் பெரும் வேறு உரைகளையும் ஆக்கங்களையும் அமைத்துக்கொள்ளும்படி தேசிய ஷூரா சபை அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ அல்லாஹ் அருள்பாளிப்பானாக!

பொதுச்  செயலாளர்
N.M. M.மிப்லி
தேசிய ஷூரா சபை

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு  அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு வழங்கியிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை நீக்கிக் கொண்டது. இதன் போது, மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை கடந்த அரசாங்கம் மீறி வந்தைமையே அதற்கான பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.

அதன் பின் ஆட்சிக்கு வந்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வந்ததுடன், இறுதியில் அச்சலுகையை மறுபடியும் பெற வேண்டுமாயின் அதற்காக 58 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தது.

நாம் அறிந்த விதத்திலும் வெளியாகிய தகவல்கள் படியும் மேற்படி நிபந்தனைகள் அனைத்தும் மனித மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பானவையே.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இசைவாகும் ஒரு நடவடிக்கையாக இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மாணித்துள்ளதாக வெளியாகிய செய்தி இலங்கை முஸ்லிம்களை வியப்பிட்கும் அதிர்ச்சிக்கும் உட்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சட்டத்துடன் இசைவாகும் விதத்தில் தற்போது இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தேசிய ஷூரா சபையும் கொண்டுள்ளது. ஆனால்,அச்சீர்திருத்தம் தொடர்பான செயற்பாடுகளை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தலைமையில் முஸ்லிம் சமூகமே மேற்கொள்ள வேண்டும் என்பதும் அதைத் தவிர்த்து, அந்த மாற்றங்கள் வெளி நபர்களால் மேற்கொள்ளப்பட முடியாது என்பதும் எமது நிலைப்பாடாகும்.

இறை கட்டளைகளின் அடிப்படையில் உள்ள இஸ்லாமிய சட்டங்களில் உள்நாட்டு சூழலுக்கு ஏற்றவாரு சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதென்பது மிகவும் எச்சரிக்கையுடன் அனுக வேண்டிய ஒரு விடயமாகும்.

இதனடிப்படையில்,இவ்விடயம் தொடர்பாக நீதிபதி ஸலீம் மர்சூஃப் தலைமையில் பல முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மற்றும் விற்பன்னர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் நியமனம் செய்ததுடன், கடந்த 7 ஆண்டு காலமாக இது பற்றி அக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.அத்துடன்,அக்குழுவின் இறுதி அறிக்கை முற்றுப் பெரும் தருவாயில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,இது போன்ற பாரதூரமான ஒரு விடயத்தை அமைச்சரவை நியமித்துள்ள ஒரு உப குழுவின் பொறுப்பில் விடுவதன் விவேகம் பற்றிய கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மேலும், இதில் உட்படும் முஸ்லிம் அமைச்சர்கள் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் இஸ்லாமிய சமூகத்தின் தீராத விசனத்திற்கும் இலக்காகும் அபாயமும் உள்ளது என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒருவருக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றும் உரிமை நம் அரசியல் யாப்பு மூலமே உறுதி செய்யப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். அதன் படி, இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மீது கை வைப்பது என்பது ஒரு ஜனநாயக உரிமை மீது கை வைப்பதற்கு சமமாகும்.

தமது மார்க்கத்தின் அடிப்படையில் செயற்படும் சுதந்திரமானது காலனித்துவ ஆட்சிக்கும் முன்பிருந்தே முஸ்லிம்களுக்குள்ள ஒரு உரிமையாகும். அத்துடன், இஸ்லாமிய சட்டமும் தனிநபர் சட்டமும் நம் நாட்டில் ஒரே சட்டக் கோவையில் இடம் பெற்றுள்ளமையானது, இன பன்முகத்தன்மை இலங்கையின் அரசியல் சாசனம் மூலமே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளமைக்கான சிறந்த ஒரு உதாரணமாகும். அத்துடன் பல இனங்கள் சம உரிமையுடன் வாழும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமும் ஆகும்.

இதை பலவீனப்படுத்துவதானது அரசாங்கம் தற்சமயம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளையும் பாரிய விதத்தில் பின்னடையச் செய்துவிடலாம்.

எனவே, ஒரு தலைப்பட்சமாக அரசு திட்டமிட்டு வரும் மேற்படிமுஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த முன்னெடுப்பை, ஸலீம் மர்சூஃப் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை பிற்படுத்துமாறு தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன், 2015 ஜனவரி மாதத்தில் நம் நாட்டு அரசியல் அரங்கில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க மாற்றத்திற்கு துணிச்சலாக தோள் கொடுத்து முக்கிய பாத்திரமேற்று செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறும்  நல்லாட்சி அரசாங்கத்தை எமது சபை கேட்டுக்கொள்கின்றது.

திருமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திப்பு

தொகுப்பு: கிண்ணியா கியாஸ் ஷாபி

இழந்து போன ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முயற்ச்சிகள் மேற்கெள்ளப்பட்ட போது சா்வதேச மனித உரிமை அமைப்புக்களால் 58 விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அப்போது கேட்கப்பட்டது. இவை அனைத்துமே யுத்தம் தொடர்பான விடயங்கள்கள் மட்டுமே. ஆனால் இன்று முஸ்லிம் தனியார் சட்டத்தோடு ஜி.எஸ்.பி. வாரிச்சலுகையை முடிச்சும்போடுவது என்பது ஒரு வேடிக்கையான விடயம் என தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தெரிவித்தார்.

untitled-2

கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா மத்திய கல்லூி மண்டபத்தில் நேற்று முன்தினம்(30) நடைபெற்ற தேசிய ஷூரா சபைக்கும் திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இது எதைக் காட்டுகிறது என்றால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமய சமூக கலாசார விடயங்களில் கை வைக்கின்ற நடவடிக்கை பல வருடங்களாக திட்டமிடப்பட்டு செயற்பட்டு வருகின்றமை புலனாகிறது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யபடவேண்டுமானால் முஸ்லிம் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெறுகின்றன.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட அல் அக்ஸா மஸ்ஜித் தொடர்பான பிரேரணையில் அரசாங்கம் வாக்களிப்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்காமையையிட்டு தேசிய ஷூரா சபை தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

dsc05728

ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அந்த நாட்டு மக்களுக்கு கூறினார். அதை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதனால் யுத்தத்துக்கு பில்லியன் கணக்கில் ஏற்பட்ட செலவையும். படைகளின் உயிரிழப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் முஸ்லிம் தலைமைத்துவம் இவ்வாறு இருக்க முடியாது. பொய் கூறி முஸ்லிம் சமூகத்தை தவறான வழியில் நடாத்த முடியாது. எனவே மேற்கத்தைய ஜனநாயகம் வேறு. இஸ்லாமிய ஜனநாகம் வேறு.

எனவே தலைமைத்துவங்கள் சத்திய வழியில் இருக்க வேண்டும். அப்போதுான் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியும். ஒன்றுபட்டால் மாத்திரமே சாதிக்க முடியும். ஒற்றுமை எனும் கயிறு பற்றி அல்குர்ஆன் கூறுகின்றது. பல நூல்களால் திரிக்கப்ட்ட கயிற்றால் ஆனையையும் வீழ்த்தலாம். அவ்வளவு பலமானது. இதற்காகத்தான் மிகவும் சவால் மிகுந்த ஒரு கட்டத்தில் தேசிய ஷூரா சபை உருவானது. இன்னும் சால்கள் தொடர்து கொண்டிருக்கின்றது. அவற்றையும் வெற்றி கொள்ள இறைவன் அருள்புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.

வரவேற்புரையை நிகழ்த்திய கிண்ணியா ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.ஏ.ஹிதாயத்துள்ளா (நளீமி) கருத்துத் தெரிவிக்கையில்,

30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்ட்ட முஸ்லிம்களுக்கும் தீா்வு வேண்டும். நிலைமாறு கால நீதி என்ற பொறி முறை தற்போது நாட்டில் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மாவட்டம் குறித்து தேசிய ரீதியில் விஷேட கவனம் செலுத்தப்டுவது காலத்தின தேவையாகும் ஏனெனில் அம்பாறைக்கு அடுத்தது இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

dsc05716

எனவே இவர்கள் எதிர்கொக்குகின்ற பிரச்சினைள் வித்தியாசமானவை.தற்போது தேசிய ஷூரா சபை கிழக்கில் ஏற்படுத்தி வரும் சந்திப்புக்கள் இதனை உணர்த்தியிருக்கும் என்று நினைக்கிறேன். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை சந்திக்கின்ற பொது இந்த மாவட்டம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இதன்போது கிண்ணியா ஷூரா சபையின் செயலாளா் எம்.ஐ.நியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

திருமலை மாவட்டத்தில் 42 வீதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இங்கு குடிப்பரமபலும் நில அமைப்பும் ஏனைய பிரதேசங்களைப் போல் அல்லாது வித்தியாசமானவை. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிறுபான்னையினராக வாழ்கின்றனர். சிங்கள மக்களை பெரும்பான்மையினராக கொண்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இதே  போன்று முஸ்லிம்களை பெரும்பான்னையினராகக் கொண்ட பிரதேசங்களில் தமிழா்களும் சிங்களவா்களும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

dsc05720

இங்கு தற்போது முக்கியமான பிரச்சினைகளாக காணிப் பிரச்சினை உள்ளது. புல்மோட்டை அரிசி மலை காணி தொடர்பாக ஆவணங்கள் தயாரிக்கப்ட்டிருக்கின்றன. கருமலை ஊற்று பிரதேச காணிகளைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். தொல்பொருள் என்ற போர்வையிலும் அபிவிருத்தி என்ற போர்வையிலும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியன் இராணுவ காலத்திலும் புலிகள் காலத்திலும் இந்த மாவட்ட முஸ்லிம்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறா்கள் என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஷூரா சபையின் செயற்குழு உறுப்பினா் முஹம்மது அஜ்வத்தின் கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கு ஒக்டோபா் 11 திகதி பெண் பிள்ளைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு பிரதமருக்கு இரண்டு அமைப்புக்கள் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியிருந்தன.ஒக்டோபா் 16 ஆம் திகதி பிரதமா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் யெ்திருந்தார். அப்பொதும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கினங்க அரசாங்கம் இந்த விடயத்தில் திருத்தங்களைச் செய்வதிலும் தீவிரம் காட்டுகின்றது.

dsc05730

இவ்வாறு சா்வதேச அழுத்தங்கள் வரும் பொது ஓரிரு தினங்களில் தீா்மானங்கள் எடுக்க முடியும் என்றால், வருட கணக்கில் மீள் குடியேற்றபடாத முஸ்லிம்கள் தொடா்பாக ஏன் தீவிரமாகக் கவனம் செலுத்த முடியாது என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஷூரா சபையின் செயற்குழு உறுப்பினா் றஷீத் எம்.இம்தியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்;

தேசிய ஷூரா சபை என்பது 18 இயங்கங்கள் ஒன்று சோ்ந்து உருவாக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தேசிய மட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வந்தது. இப்போது மாவட்ட ரீதியான பிரச்சினைகளை திரட்டி வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தோடு தேசிய ஷூரா சபையின் தொடா்பு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

dsc05722

தேசிய ஷூரா சபை மாவட்ட கிளைகைளைக் கொண்டிருப்பதில்லை. பிராந்திய ரீதியாக அமைப்புக்கள் எங்களுடன் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கு அனுமதி பெற்றுத்தரப்படும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினா்களை மாதம் இருமுறை தேசிய ஷூரா சபையோடு  சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியமை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்தார்.

மூதூா் வி.எம்.நகீப் (ஓய்வுபெற்ற அதிபர்)

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. சம்புா் பிரதேசத்தில் முஸ்லிம்களும் குடியிருந்தார்கள். அதற்கு ஆதாரம் இருக்கின்றன. அங்கு பள்ளிசாசல் இருந்திருக்கிறது. ஏன் அங்கு முஸ்லிம்களை குடியேற்ற தயக்கம் காட்டுகிறார்கள்.

மீண்டும் சம்புரில் 300 வீடுகள் கட்டப்படுகின்ற. அதிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்ட்டிருக்கிறார்கள்.

அடுத்து நவலடிக் கிராமம் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம். அங்கு பள்ளிவாசல் இருந்திருக்கின்றது. இங்கும் முஸ்லிம்களைக் குடியேற்றி அவா்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் தோப்புர் லங்கா பட்டணத்திலும் முஸ்லிம் கிரமம் இருந்தது. யுத்ததின் பின்னா் இப்பொது அடையானளம் காணமுடியாது இருக்கிறது. இங்கு 3 பள்ளிவாசல்கள் இருந்தன. இங்கும் முஸ்லிம்கள் குடியேற்றப்படவேண்டும்.

புல்மோட்டை அப்துல் சலாம்( ஓய்வு பெற்ற கிரம சேவகர்)

புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரபட்சமற்ற சேவை கிடைக்கும். இதற்கு தேவையான நிலப்பரப்பும் சனத் தொகையும் உள்ளன. அத்தோடு குச்சவெளிப்பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயம் வேண்டும்.

பிரதேச பிரதி அமைச்சர் ஒருவரின் அனுசரணையுடன் புல்மோட்டை பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அவர் ஒரு சிங்கள் பிரதேச மக்களைக் கொண்டு வந்து எங்களுக்குச் சொந்தமான காணியில் குடியமா்த்தி வருகின்றார். அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எமது முஸ்லிம் தலைமைகள் இவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்குச் சொந்தமான காணியிலும் ஒரு வறிய சிங்கள குடும்பம் ஒன்றை குடியமா்த்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக நான் செய்த முறைப்பாட்டை அடுத்து பிரதேச செயலம் அவா்களுக்கு அவசர நோட்டீஸ் அனுப்பியும் இன்னும் அவா்கள் எழும்பவில்லை. அத்தோடு ஆண்டாம் குளப் பகுதியில் விகாரை ஒன்றை நிா்மாணித்து 500 ஏக்கா் காணியை படையினர் பிடித்து அவா்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.

கிண்ணியா எம்.ஏ. அப்துல் ஹாதி (கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவா்)

ஒரு இலட்சம் மக்களைக் கொண்ட கிண்ணியாவில் இன்னுமொரு பிரதேச செயலகம் உருவாக்கப்படல் வேண்டும். ஒரு பிரதேச செயலகத்தால் இவ்வளவு பெரிய சனத் தொகையை நிா்வகிக்க முடியாது. கிண்ணியாவின் எல்கை் கிராமங்களான சுண்டியாறு, வாழைமடு போன்ற பிரதேசங்கள் பெரும்பான்மை சமூகத்தால் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பமட்டு வருகின்றன. இதனால் கிண்ணியா மக்களின் விவசாயக் காணிகள் பறிபோகும் ஆபத்து எற்பட்டுள்ளது. கிண்ணியாவின் எல்லைக்  கோடுகளை உடனடியாக சட்ட ரீதியாக ஆக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பதை விடுத்து இதை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குச்சவெளி ஏ.எல்.றபாய்தீன் (ஆசிரியா்)

குச்சவெளி மக்களின் காணிப் பிரச்சினைகள் தீா்க்கப்பட வேண்டும். கடந்த 30 வருடங்களாக பயிரிடப்படாத நிலங்கள் எல்லாம் வனாந்தர காடுகளாக மறியிருக்கின்றன. அவற்றை உரியவா்கள் துப்பரவு செய்து பயிர் செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். மக்கள் இங்கு செல்வதற்கு வனவள  திணைக்களம் தடையாக இருக்கிறது.

இலந்தைக்குளம் பகுதியில் 350 ஏக்கா் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்ட்டிருலுக்கினறன. இவற்றை மீளப் பெற்றுத்தர வேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் யுத்த பாதிப்புக் குறித்த விடயங்கள் சாரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. எனது தந்தை ஒரு கிராம சேவகர், அவர் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்டவா்கள் இங்கு காணமல் போய் இருக்கிறார்கள். சிலருக்கு இன்னும் மரண அத்தாட்சிப்பத்திரம் கூட கிடைக்கவில்லை. சுற்றுலாத்துறை காரணமாக இன்னும் பலர் காணிகளை இழக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கும் தீா்வினைப் பெற்றுத்தர வேண்டும்.

கருமலைஊற்று அஹமட் கரீம் (கருமலைஊற்று பள்ளிவாசல் தலைவர்)

கருமலைஊற்றுப் பிரதேசம் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எங்களுக்குச் சொந்தமான காணிகளில் படையினர் இன்னும் இருக்கின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்களுக்காகக் கட்டப்பட்ட விடுகளில் குடியிருப்பதற்கு அனுமதி தரப்படவிலலை. சுமார் 150 ஏக்கா் காணி இன்னமும் படையினர் கட்டுப்பாடடிலே இருக்கின்றது. இதனால் எங்களுடைய கடற்றொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இந்தச் சந்திப்பின் போது முடிவுரை நிகழ்த்திய தேசிய ஷூரா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க். எஸ். எச்.எம்.பழீல் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த இடத்தில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களை பார்கின்ற போது அரசியல் பிரச்சினைகளோடு வேறு பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொண்டுள்ளமை தெளிவாகின்றது. எமது சமூகத்தின் குடும்ப நிறுவனம் படு மோசமாக வீழ்ச்சி அடைந்து கொண்டு செல்கின்றது. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவா்களுக்கும் இடையிலான சக வாழ்வு பாதிக்கப்ட்டு கொண்டு வருகின்றது. பொருளாதார ரீதியாக பின்னடைந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கிய சுகாதார வாழ்வில் ஏனைய அனாத்தோடு ஒப்பிடும் போது ஒரு கீழ் தரமட்டத்தில் இருக்கிறோம். இளைஞா்கள் திசைமாறிச் செ்கிறார்கள் இந்த பிரச்சினைகளில் ஒரு பிரச்சினைதான் அரசியல் ரீதியான பிரச்சினையாகும்.

dsc05725

இந்தப் பிரச்சினைகளை அனுகுவதற்கு முழுச் சமூகமும் ஒட்டு மொத்த பார்வையச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பங்கிருக்கின்றது. ஊா்வாதம், இயக்க ரீதியான பிளவுகள் அற்ப விடயங்களுக்கு சண்டை செய்கின்ற தன்மை இவற்றில் இருந்து நமது சமூகம் விடுதலை பெற வேண்டும்.

நாம் ஆதாரங்களோடு பேச வேண்டும். அறிவு பூர்வமாக பேச வேண்டும். உணா்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. பொருத்தமான வழிமுறை ஊடாக அவற்றைப் பேச வேண்டும். தகவலைத் தொியப்படுத்துவதற்கு பொருத்தமான ஊடகத்தை தெரிவு செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமூகம் அறிவுள்ள சமூகம். ஆதாரத்தோடு பேசுகின்ற சமூகம். ஒரு முன்மாதிரியான சமூகம். அந்நிய சமூகத்தொடு சகவாழ்வோடு வாழ விருப்புகின்ற சமூகம் என்று அந்நிய சமூகம் எம்மை இனங்காணப்படாபதவரை நாம் மேலும் மேலும் அடிமைச் சமூகமாகவே இருப்போம் எனத் தெரிவித்தார்.

20161030_095330 20161030_095252

சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்டு கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான விஷேட சந்திப்புகளை தேசிய ஷூர சபை மேற்கொண்டு வருகின்றது.

அத்தொடரில் அதன் அங்கத்துவ அமைப்பில் ஒன்றான சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்துடனான சந்திப்பு 19.10.2016 அன்று கொழும்பு பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள சோனக இஸ்லாமிய கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே.தாரிக் மஹ்மூத் , உபசெயலாளர் எம்.டி. தஹாசிம் , பொருளாளர் மௌலவி ஸியாத் இப்ராஹீம் நிறைவேற்று குழு உறுபினர்களான மௌலவி.தஸ்லீம் , அஷ்.ஷேக்.அப்துல் அஸீம் போன்றோரும் . சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அங்கத்தவர்களான தலைவர் ஒமர் காமில் ,  சகோ.அஷ்ரப் ஜமீல்  மற்றும் எஸ்.ஏ. முர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல முக்கியமான விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக தேசிய ஷூரா சபையின் தோற்றம், செயற்பாடுகள், ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் முன்னால் அரசியல் தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசில் சார்பற்ற நிறுவனம் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இந்நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளப்பரிய சேவைகளை அவர்கள் முன்வைத்தனர். முக்கியமாக முதன் முதலாக அல்-குர்ஆன் மற்றும் ஸஹிஹுல்- புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை சகோதர மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர்.

மேலும் முஸ்லிம் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதோடு சில வரலாற்று நிகழ்வுகளையும்  சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின்  தலைவர் நினைவூட்டினர்.

கலந்துரையாடலின் போது அவர்; அவர்களால் மேற்கொள்ள முடியாத விடையங்களை தேசிய ஷூரா சபை  மேற்கொள்வதாகவும் அதற்கு அவர்கள்  முழு ஆதரவையும் ஒத்துளைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர்.

சகவாழ்வு உபகுழுவின் குருநாகல் மாவட்ட விஜயம்

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான ஜமாதுல் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 25.10.2016 அன்று குருநாகல், பரகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வமைப்பின் செயலாளர் ஏ. எல். கலீலுர் ரஹ்மான், டாக்டர். அம்ஜத் ராசிக், அஷ்.ஷேக். இஸ்மாயில் ஸலபி , ஜனாப். ஹித்மதுல்லாஹ், தாருத் தௌஹீத் ஸலபிய்யா அரபுக் கலாசாலையின் பிரதி அதிபார் எஸ்.யூ. ஸமீன் மற்றும் அஷ்.ஷேக். அன்சார் ( ரியழி ) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்க்கான உபகுழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உபகுழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம், உறுப்பினர்களான மௌலவி தஸ்லீம் மௌலவி, அஷ்.ஷேக். முனீர் முளவ்பர் ( நளிமீ ) , அஷ்.ஷேக். அலாவுதீன் (ஸலபி ) , அஷ்.ஷேக். லாபிர் மதனி மற்றும் ஜனாப் .பவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் தோற்றம், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் கடந்த கால, எதிர் கால செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான மூலோபாய திட்டமிடல் (Strategic way forward ) பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு தமது  அமைப்பின் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக சகோ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினால் 7 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றில் ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் செயலாளர் ஜனாப். கலீலுர் ரஹ்மான் அவர்களிடம் சகவாழ்வுக்கான உப குழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம் அவர்களால் வழங்கப்பட்டது.

முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தேசிய ஷூரா சபை முன்னெடுக்க வேண்டும்

தேசிய ஷூரா சபையுடனான சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுத்தல்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் மற்றும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை(26) இரவு கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களில் முஸ்லிம் சமூகத்தின் சமகால மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்  எந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுவரும் அதிர்ச்சிதரும் மாற்றங்கள், புதிய அரசியலமைப்பு மாற்றத்தில்; தேர்தல் முறைமை மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம்,  வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு, என்பன பற்றியும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும்  காணிப்பிரச்சினைகள் மற்றும் பொதுவாக சமூகப் பிரச்சினைகள் கலந்தரையாடப்பட்டன.

[Best_Wordpress_Gallery id=”4″ gal_title=”Meeting with Muslim MPs”]

தேசிய ஷூரா சபை தலைவரான தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப அமர்வில் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பைசல் காசிம் மற்றும் கௌரவ அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம் நவவி, முஜீபுர் ரஹ்மான், அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம் மரிக்கார், இஷ்ஹாக் ரஹுமான், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்து முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான பல முக்கிய வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

அதன்படி பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,

  • முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகிய பைதுல் முகத்தஸ் மீதான யுனெஸ்கோ தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்தது இலங்கை அரசாங்கம் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டதையும், அதனைத் தவறான முறையில் நியாயப்படுத்த முயற்சித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது கூற்றையும் வன்மையாக் கண்டித்தும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடல்.
  • இலங்கை முஸ்லிம்களின் உடனடியாகத் தீர்வுகானப்பட வேண்டுடிய அல்லது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் கட்சிபேதம், பிரதேசவாதம் மறந்து அனைத்து முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தளத்தை தேசிய ஷுரா சபை உருவாக்கி முன்னெடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பிரச்சினையும் பல்பக்க வடிவங்களையும், நீண்டகால வாழ்வியல் சான்றாதாரங்களையும், சிக்கல்தன்மைகளையும் கொண்டுள்ளமையினால், அவை அனைத்தும் தனித்தனியாக துறைசார்ந்த நிபுணர்களின் பங்கேற்புடன் ஆராந்து தீர்வுகாணப்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும், பாராளுமன்றம் நடைபெறும் வாரங்களின் (முதலாம்/மூன்றாம் வாரங்கள்) புதன் கிழமைகளில் (7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் தொடர்சியாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்த அமர்வுகளுக்கான தெளிவானதும், வெளிப்படையானதுமான நிகழ்ச்சி நிரல்களும், சபை ஒழுங்குகளும் பேணப்படல் வேண்டும்.

அன்றைய தினம் பாராளுமன்றத்தில் VAT சட்டமூலம் மீதான வாக்கெடுப்பிற்கான காலம் திடீர்ரென ஒரு மணி நேரத்தால் (பி.ப.6.30 இலிருந்து 7.30 வரை)) நீடிக்கப்பட்டமை காரணமாக கௌரவ அமைச்சர்களான ரவூப் ஹகீம் மற்றும் கபீர் ஹாஷிம் உட்பட பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியாமைக்கான தமது வருத்தத்தை தொிவித்ததுடன் தேசிய சூரா சபையின் அடுத்தகட்ட முன்னெடுப்புக்களுக்கு தமது ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பதனையும் அறியத்தந்தனர்.  அமைச்சர்களான ஏ. எச். எம். பவுஸி, எம். எல். ஏ. எம்.  ஹிஸ்புல்லாஹ், அலி ஸாஹிர் மவ்லானா ஆகியோர் தமது வெளிநாட்டுப்பயணம் காரணமாக சமூகமளிக்க முடியாமையை அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு 8 மணி தொடக்கம் 10.00 மணிவரை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தேசிய ஷுரா சபையில் அங்கம்வகிக்கும் 18 தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.